Sunday, 15 September 2019

சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கான சாட்டையடி...





இயக்கம்: மாரி செல்வராஜ்
நடிப்பு :கதிர்,ஆனந்தி,யோகிபாபு,
லிஜிஸ்,ஹரிகிருஷ்ணா,'பூ' ராமு,சண்முகராஜன்,மாரிமுத்து,
கராத்தே வெங்கடேசன்.
ஒளிப்பதிவு : ஸ்ரீதர்
தயாரிப்பு : பா.ரஞ்சித்
படத்தொகுப்பு : செல்வா.ஆர்.கே
இசை : சந்தோஷ் நாராயணன் 

                                   

 ஆணவக்கொலைகள் விபத்துகளாகவும்,தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுகின்றன என்பதை வன்மத்தைத் தூண்டாமல் மிக எளிமையாக மாரி செல்வராஜ் பதிவு செய்திருக்கும் படமே பரியேறும் பெருமாள்.திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்த்தவர் பரியேறும் பெருமாள்(கதிர்).சட்டம் படிக்க சட்டக்கல்லூரியில் சேர்ந்து சாதி வெறி  காரணமாக பல அவமானங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்.அதிலிருந்து மீண்டு வந்து அவற்றையெல்லாம் எதிர்த்து சட்டம் படித்து முடித்தாரா? இல்லையா? என்பதுதான் பரியேறும் பெருமாள் பிஏ.பி.எல் மேல  ஒரு கோடு .
இந்த படம் 2005-ல் நடந்த கதையாக சித்தரித்துள்ளார் மாரி செல்வராஜ்.
படத்தின் தொடக்கமே சாதி வெறியின் உச்சத்தை நன்றாக எடுத்துக்காட்டுகிறது. ஏழறிவுள்ள நன்றிகெட்ட மனிதர்களுக்கிடையே உள்ள சாதி வெறி காரணமாக எந்த தவறும் செய்யாத நன்றியுள்ள ஆறறிவு உயிரை (கறுப்பி)  கொள்வதன் மூலம் நம் நாட்டிலுள்ள சாதி வெறியை கலக்கமுடனும் கோபத்துடனும் திரையிட்டிருப்பது மாறி செல்வராஜின் சிறப்பு.ஆறறிவு மிருகங்களிடம் உள்ள அன்பு கூட ஏழறிவு கொண்ட மனிதனிடம் துளியும் இல்லை என்பது வெட்கப்படவேண்டியதாக உள்ளது.கதிர் தன்னுள் ஒருவனாகவே  வளர்த்த தன் கறுப்பி இல்லாமையால் கதறி அழும் காட்சி நம்மை பரிதவிக்கவைக்கிறது.கறுப்பி  இறந்தபின் வரும் பாடல் கதிர் கறுப்பி மீது வைத்திருக்கும் பாசத்தையும்,நெருக்கத்தையும் காட்டுகிறது.
                             
திருநெல்வேலியில் கோட்டா மூலமாக சட்டக்கல்லூரியில் நுழையும் பரி
கல்லூரி முதல்வரிடம் தன் அப்பாவின் உண்மைத்தொழிலை கூறத்தயங்கி வண்டி மாடு ஓட்டுவதாக பொய்யுரைக்கும் காட்சி சக மாணவர்களின் ஏளனப்பார்வையால் பல மாணவர்கள் கல்லூரியில் நுழையவே தயங்குவதைக் காட்டுகிறது.
                             
பரி(கதிர்) கல்லூரி முதல்வரிடம் "என்னவாகப்போற? டாக்டராக போறேன்", எனும் காட்சி நகைச்சுவையாக இருப்பதுடன் ஒரு சொல் பலரின் பார்வையில் பல அர்த்தமாக பதியும் என்பதற்கும் இக்காட்சியை சாட்சி.
                                      
அனைத்து கல்லூரிகள் போலவே கேலி,கிண்டல்,ராகிங்குகளுடன் தொடங்கும் பரியின் முதல் நாள் கல்லூரியில் யோகிபாபுவுடன் நட்பு தொடங்க தன் பெயருக்கான விளக்கத்தை அழகாக கூறும் காட்சி,தற்போது வைக்கப்படும் பெயர்கள் பலரின் வாயில் கூட நுழையாத பட்சத்தில் எத்தனை பேருக்கு தங்கள் பெயரின் அர்த்தம் தெரியும் என்பது கேள்விக்குறியே?"பரியேறும் பெருமாள்  பிஏ.பி.எல் மேல  ஒரு கோடு " என்னும் வசனம் படம் முழுவதும் நகைக்கும் படி உள்ளது.கிராமங்களில் பள்ளி முடித்து வெளியூருக்கு படிக்க வரும் பல மாணவர்களின் ஒரே பிரச்சனை "ஆங்கிலம்" என்பதை மிகவும் அழகாக கூறியுள்ளார் மாரி  செல்வராஜ்.

கல்லூரியில் ஜோ என்ற ஜோதி மகாலெட்சுமியாக அறிமுகமாகும் ஆனந்தி மிகவும் வெகுளியாக,நல்ல தோழியாக,நல்ல மகளாக என அனைத்து பாத்திரங்களிலும் அழகாக குழந்தை மனதுடன் நடித்து பார்ப்பவர்கள் மனத்தைக் கொள்ளையடிக்கும் தேவதையாக இருப்பது மிகையே.
                                    

கல்லூரியில் பயிலும் சக மாணவ மாணவிகளிடம் சந்தேகங்களைக் 
கேட்கத் தயங்குபவர்கள் மத்தியில் எவ்வித தயக்கமும் பதட்டமும் இன்றி தனது சந்தேகத்தை கேட்கும் கதிர்  மிகவும் எதார்தமாகவே நடித்துள்ளார் என்பதை விட பரியனாகவே வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம்.
" Red has many meanings,youth can make it more meaningful" என்னும் வரிகள் இளைஞர்கள் மனதில் என்னவாக பதிந்தது என்பது புதிரே!யோகிபாபுவின் "சின்ன 'சி' யா இல்ல பெரிய 'சி' யா" ,என்னும் வசனம்  சிரிக்கவைக்கிறது.கதிர்(பரியன்) ஆங்கிலம் தெரியாததால் ,கிண்டல்களுக்குள்ளாகும்  சமயத்தில் ஆனந்தியின் அன்பான பேச்சு பரியனிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
                         
கராத்தே வெங்கடேசன் சாதி மாறி காதலிப்பவர்களை எவ்வித சாட்சியும் இல்லாமல் கொலை செய்வதில் வல்லவராகவும்,இவர் வரும் காட்சிகளில் யார் சாகப்போகிறார்களோ?எந்த காதல் மண்ணில் புதையப்போகிறதோ?என்ற ஒரு அச்சம் பார்ப்பவர் மனதில் எழுகிறது.சாதி காரணமாக மனதால் ஒன்றிணைந்தவர்களை தான்   பெற்று வளர்த்த பிள்ளைகள் என்பதையும் மறந்து கொள்ளும் ஆணவக்கொலை இன்றும்  நாட்டில்   நிலவும் முக்கிய குற்றங்களில்  ஒன்றாகும்.
                          
ஒருவனுக்கு ஒரு குறை என்றல் அதை எப்படி  சரி செய்வது என்பதைத் தவிர அவனை எவ்வாறெல்லாம் தாழ்த்த முடியுமோ அவ்வாறெல்லாம் தாழ்த்தலாம் என்பதை  "முட்ட முட்ட முட்ட முட்ட முட்ட முட்ட" என்னும் காட்சியின் மூலம் காண முடிகிறது.அந்த நிலையில் பரியனின் கோபம் நியாமானதகவே கருதப்படுகிறது."வயதிற்கு மரியாதை  கொடுத்ததெல்லாம் போய் அன்றிலிருந்து இன்றுவரை  சாதிக்கு தான் மரியாதை" என்பதை காவல்  நிலையக் காட்சியின் மூலம் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்  மாரி செல்வராஜ்.தாத்தாவின் வார்த்தைக்காகவே பரியேறும் பெருமாள்,பரியேறும் பெருமாள்  பிஏ.பி.எல் மேல  ஒரு கோடு  என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டு சட்டக்கல்லூரியில் நுழைகிறார்.
                                    



"இங்கிலிஷ்  சொல்லித்தரவங்களெல்லாம் உனக்கு தேவதைனா நானும் உன் மனதில் தேவதையாகணும்" என்று ஆனந்தி(ஜோ) பரியனிடம்(கதிர்) பழகும் விதம், ரசிகர்கள் மனதிலும் தேவதையாகவே அவரை அமரவைக்கிறது.தோழியாகவே பழகும் ஆனந்தி(ஜோ) தன்னையும் அறியாமல் தன் மனதை பரியனிடம் இழக்கும் காட்சி எவ்வித முகசுழிப்பும் இன்றி இளைஞர்கள் மனதில்  இடம்பிடித்திருப்பது அழகே.
                                  
தனது அப்பாவிடம் ஒளிவு மறைவின்றி பேசும் ஆனந்தி  அவரின் அக்கா கல்யாணத்திற்காக பரியனுக்கு மட்டும் பத்திரிக்கை வேணும்னு சொல்லி  பல ஆசைகளுடன்  கல்யாணத்திற்கு வரும்படி சொல்லி சென்றாள்.
                                
பரியும் அன்று சந்தோசத்துடன் திருமணத்திற்கு செல்ல,ஆனந்தியின்  அப்பாவும் அவரின் அண்ணன்களும் அவனை சாதியில் தாழ்ந்தவன் எனும் ஒரே காரணத்திற்காக அவனை அடித்து உதைத்து இரத்தம் தோலைக் கிழித்து வெளியே வர சிறுநீரின் உப்பு அதில் பட்டு ஏற்படும் வேதனையுடன் கதறி அழும் காட்சி பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தையும் மனஉருக்கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
                              
இது எதையும் அறியாத ஆனந்தி(ஜோ) கோபத்துடன் கதிரிடம்(பரியன்) சண்டையிட்டு "என்ன அழவச்சு  பாக்கணும்னு முடிவு பண்ணிட்டில?" என்னும் கேள்வி அவர்கள் இருவரையும் கஷ்டப்படுத்தியதும் இல்லாமல் பார்ப்பவர்களையும் மன வருத்தத்திற்குள்ளாக்குகிறது.
"சாதி பாத்தா நா உன்கூட பழகுறேன்? எதுக்காக அடுச்சேன்னு சொல்லு.நானு சேந்து அடிக்கிறேன்",என்னும் வசனம் யோகிபாபுவை நகைச்சுவையிலிருந்து விலக்கி ஒரு நல்ல நண்பனாக காட்டுகிறது.ஜோவிடம் சொல்லவும் முடியாமல்  மெல்லவும் முடியாமல் பரியன் பரிதவிக்கும் காட்சி மனதை உருக்கும் படி உள்ளது.
                                             
பஸ்ஸில் அருகில் அமர்வதுகூட சாதிக்காரனோடுதான் என்றால் அந்த பஸ்ஸின் சொந்தக்காரன் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் அந்த பஸ்ஸில் பயணிக்க மாட்டார்களோ?எனும் கேள்வி பார்ப்பவர்கள் மனதில் எழுகிறது.
                           
சாதிக்காக பரியனை பெண்கள் கழிவறையில் தள்ளி கதவடைக்கும் காட்சி, அதனைப் பார்க்கும் இளைஞர்களின் நரம்புகள் சுண்டித்தெறிக்கும் அளவிற்கு கோபத்தையும் உண்டாக்குகிறது.முன்னர் தனது அப்பாவிற்கு பதில் வேறொருவரை நடிக்க அழைத்து வந்த பரியனே, இந்த முறை  கல்லூரிக்கு தனது அப்பாவையே அழைத்து வருவதாக சொல்லும் காட்சி அவர் மனதில் உள்ள வலிகளையும்,யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?எனக்கு என் அப்பாதான் வேணும் எனும் பாசம் கலந்த உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
                      
"ரூம்ல தூக்கு மாட்டி சாகுறதுக்கு  சண்டை போட்டு சாகட்டும்", எனும் கல்லூரி முதல்வரின் பேச்சு, இந்த நாட்டில் சாதி வெறி பிடித்த மிருகங்களை,அடக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்துகிறது.
                    
பரியனின் அப்பாவை அசிங்கப்படுத்தி வேட்டியை உருவி நடுரோட்டில் ஓடவிடும் காட்சி கலக்கத்தையும்,அதீத கோபத்தையும் உண்டாக்குவதுடன் அல்லாமல் சாதி வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.
                     
"தேங்க்ஸ்  சொல்ற அளவுக்கு நம்ம தூரமாகிட்டோம்ல?" என்னும் ஆனந்தியின் வசனம் பலரின் மனதில் மிக ஆழமாக பதிந்ததுடன் பல நினைவலைகளையும் மனதில் கொண்டுவரும்படி உள்ளது."உன்  கண்ண  பாத்து சொல்ற தைரியம் எனக்கில்ல",என்று தன் கண்களை மூடிக்கொண்டு அழகாக தனது மனதில் உள்ள காதலை குழந்தைத் தனமும் அப்பாவித்தனமும் கலந்த பாணியில்  கூறும் விதத்தில் பலரின் மனதையும் கொள்ளையடித்து செல்கிறார் ஆனந்தி.இன்றைய சூழலில் பலரின் மனதில் வெளியே சொல்ல தைரியமில்லாமல் உள்ள பல ஏக்கங்களில் ,"நீ முன்னாடி மாறி  பேசுவியா?" எனும் ஏக்கமும் முக்கிய இடைத்தைப் பிடிக்கிறது.
ஆனந்தியின் அப்பா மாரிமுத்து பரியனைக் கொல்லத் திட்டமிட்டு பரியன் தப்பி வந்து மாரிமுத்துவிடம் பேசும் காட்சி,சாதி வெறியுள்ள மனிதர்களுக்கு இல்லை இல்லை மிருகங்களுக்கு பலத்த அடியாகவே உள்ளது.
                                    
இறுதியாக ஆனந்தியின் அப்பா பரியனை சந்தித்து பேசும் போது,"நாளைக்கு எது வேணாலும் எப்படி வேணுனாலும் மாறலாம் .யாருக்கும் தெரியாதுல",என்று கூறியதற்கு "எனக்கு தெரியும். நீங்க நீங்களா இருக்குறவரைக்கும் நா நாயாதான் இருக்கணும்னு நீங்க எதிர் பாக்குறவரைக்கும் இங்க எதுவுமே மாறாது" எனும் பரியனின் பதில் சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு சாட்டையடியாகவே உள்ளது.
              
              
விவேக்கின் "வா ரயில் விட போலாமா" எனும் பாடல் அனைவரையும் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும்படியும், உயர்வு-தாழ்வு,கருப்பு-அழுக்கு என்பது குழந்தையாக இருக்கும் யாருக்கும் புரிவதில்லை என்பதையும் ஒரே பாடலில் அழகாக கூறியுள்ளார்.
                                        



"இறுதியில் உயர் சாதியானாலும், கீழ் சாதியானாலும் அனைவரும் 
சமமே" என்பதை மாரிமுத்துவும் கதிரும் அருந்திய தேநீர் குவளையின் அளவு சமமாக உள்ளதைக் காட்டி முடிப்பது மிகவும் அழகாகவே உள்ளது.



ஒரே வரியில் சொல்லனும்னா சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு "பரியேறும் பெருமாள் பிஏ.பி.எல் மேல  ஒரு கோடு" சாட்டையடியாகவே உள்ளது.























  

1 comment:

என் கண்ண பாரு .......இதுதாண்டா எங்க ஊரு......... மொறச்சா உன்ன மொறப்போம்.....நீ அடுச்சா உன்ன அடிப்போம்........... திருப்பத்தூர் பெயர்க...